Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397
 செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாம். . . எதுக்காம்? - செல்வ.ரஞ்சித் குமார்

சாமீ! எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும்!

👦 செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாம். . . எதுக்காம்?

👳 ஆசிரியரா இருந்து குடியரசுத் தலைவரா உயர்ந்த Dr.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்ல. . .

👦 ஓகோ. . . அப்ப வாத்தியாரா இருந்து முதல்குடிமகனா உயர்ந்தா அவரு பெறந்த நாள கொண்டாடனுந்தேன். . . அதுசரி இவரு வாத்தியாரா இருந்து என்ன செஞ்சாரு?

👳 ஏய் அவரு பல பல்கலைக்கழகங்கள்ல பேராசிரியரா, துணை வேந்தராலாம் இருந்தாரு. . .

👦 எப்ப. . .?

👳 1909ல இருந்து 1948 வரைக்கும்!

👦 ஆமா, 1909ல இருந்து 14.08.1947 வரைக்கும் இந்தியாவுல என்ன நடந்துச்சு?

👳 அட இதுகூடத் தெரியாதா, அர்த்தங்கெட்ட கூக. . . அது சுதந்திர போராட்ட காலம்ல. . .

👦 ஆமால்ல! சரி அந்தக் காலத்துல பேராசிரியரா, துணை வேந்தராலாம் இருந்தவரு எத்தன போராட்டத்துல கலந்துக்குட்டாருனு தெரியுமா?

👳 அது வந்து. . . அது வந்து. . . சரி உனக்குத் தெரியுமா?

👦 எனக்குத் தெரியாமத்தேன் உங்கிட்ட கேக்குறேன்.

👳 எனக்குத் தெரியல. நா வேணா தேடிப்பாத்து சொல்லுறேனே!

👦 அதுசரி. நீ மெதுவா பார்த்து சொல்லு. நான் தேடிப்பாத்த அளவுல நமக்குக் கெடச்சது, ராதாகிருஷ்ணன் அப்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய தேசிய காங்கிரசோடுகூட எந்தத் தொடர்பும் இல்லாதவராம். மேலும் இவர் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான எந்தப் போராட்டத்தலயும் பங்கெடுக்காதவராம். பெண்கல்வி & ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி மறுமலர்ச்சிக்கான எந்த முயற்சியும் செஞ்சதாவும் தெரியல.

👳 ஏ அதால என்ன. . . அவருதேன் பேராசிரியரா, துணை வேந்தரா இருந்திருக்காருல. . .

👦 ஏம்ப்பா ஏய். . . வாத்தியாருனா எண்ணும் எழுத்தும் மட்டும் சொல்லிக் கொடுக்றவுகனு நெனச்சியா. . .?

👳 பெறவு!

👦 ஒருவர் இச்சமூகத்தில் நேர்மையாக வாழத்தேவையானவற்றைப் போதிப்பவரும், சமூக ஒழுங்கிற்கு / தனிமனித உரிமைக்கு பாதிப்பு வரும் பொழுது அதைச் சட்டத்திற்கு உட்பட்டு எதிர்த்து மீட்க கற்றுத் தருபவரும், மீட்கும் களத்தில் நிற்பவருமே உண்மையான ஆசிரியராக இருக்க முடியும்.

👳 அதெல்லாஞ்சரி. இதுக்கும் இவரு பொறந்த நாள கொண்டாடுறதுக்கும் என்ன சம்பந்தம்?

👦 அதே கேள்விதான் எனக்குள்ளும். பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டமெங்கும் விடுதலைப் போராட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்ற காலத்தில் மக்களாடு மக்களாக நிற்காத, குறைந்தபட்சம் அவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்த்து நிற்காத / எதிர்த்து நிற்கும் அறிவைப் போதிக்காத ஒருவரை. . . . தனது நலன் மட்டும் நோக்கி தனது திறமையால் வாழ்ந்து உயர்ந்த ஒருவரை. . . தனிப்பட்ட முறையில் பாராட்டலாம். . . வாழ்த்தலாம். . . ஆனால், எப்படி ஆசிரியர் இனத்தின் முன்மாதிரியாகக் காட்டலாம்? ? ? ?

👳 ஆமால்ல. . . ஆனா காட்டீருக்காகலே!

👦 அடக்கொடுமையே! காட்டீருக்காக இல்ல... காட்டிக்கிட்டாரு. . .!

👳 புரியலயே. . .

👦 1962-ல் அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது, அவரது மாணவர்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியுள்ளனர். அப்பத்தான் இவரு எனது பிறந்தநாளை ஆசிரியர் தினமா கொண்டாடுங்கனு வான்ட்டடா கேட்டிருக்காரு.

👳 ஏம்ப்பா. . . அவரு ஏதோ விரும்பி கேட்ருக்காரு. . . கொண்டாடுறாக சரி. ஆனா. . . ஆசிரியர்களின் முன்மாதிரினு ஏன் காட்டனும்???

👦 அப்படி காட்டுனதுக்கும். . .  தொடர்ந்து கட்டமச்சதுக்கும். . . பின்னால, இப்ப நம்ம கண்ணால பாத்துக்குட்டு இருக்குற சூதுவாதெல்லாம் நெறைய இருந்திருக்கு! அதுபத்தி பெறவு பேசலாம்.

•••••   •••••   •••••   •••••   •••••

இன்றைய & நாளைய ஆசிரிய சமூகத்திற்கான உரிமைப் போராட்டங்களின் மீது இப்பொதுச் சமூகம், 'வாத்தியானுக, போராடுனாலே சம்பளத்துக்குத்தேன் போராடுறாக!' என்ற தவறான பார்வையை பதித்துள்ளது என்பது பார்வைக் குறைபாடு அல்ல.

இப்பொதுச் சமூகம் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சமூகப் பங்களிப்புகள் அதிகம். அவை நிறைவு செய்யப்படாத / முறையாக வெளிப்படுத்தப்படாத வேளையில், நடைபெறும் உரிமைப் போராட்டங்களை இச்சமூகம் சம்பளத்திற்கென சுருக்கிப் பார்த்துவிடும்படியாக அதிகார வர்க்கம் அவர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது.

ஆசிரியர்கள் மீதான பார்வையும், தேவையும் இவ்வாறு இருக்க, விடுதலை வேள்வியில் தனது வேட்டியின் கரை நுனியைக்கூட எரிக்கக் கொடுக்காதவரை ஆசிரியர்களுக்கான முன்மாதிரியாகக் கொண்டாடுவது சரியா?

விடுதலைப் போராட்ட காலத்தில் பிரசிடென்சி கல்லூரி முதல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை வரை கல்விப் பணியாற்றிய முனைவர்.சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்றதொனியில் இவ்வினா எழவில்லை. இப்பொதுச் சமூகம் 'ஆசிரியர்' என்பவரிடமிருந்து எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளின் எதிரொலியே எனது கேள்வி.

'அதெல்லாந்தெரியாது. . . நாங்க கொண்டாடியே தீரனும்!' என்றால் மகாத்மா ஜோதிராவ் பூலே-வையும், சாவித்ரிபாய் பூலே-வையும் படிக்க முயற்சி செய்யுங்கள்!

அதன்பின் யாரை ஆசிரிய சமூதாயம் கொண்டாடியிருக்க வேண்டும் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியவரும்.

நன்றி!

முழுமையான ஆசிரியராக இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்,
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

Post a Comment

Previous Post Next Post

TN Police Exam 2020 - Free Class Call - 95 43 43 43 97