Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
செப்டம்பர் 05 - ஆசிரியர் தின கவிதை / Teachers Day kavithai 

இன்று (05.09.2020) ஆசிரியர் தினம்.

நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள்.

அந்த ஆசிரியர்கள் நம்மைவிட கல்வியில் பதவியில் மற்ற நிலைகளில் குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் எழுத்துக்களை அறிமுகம் செய்து ஆரம்பக் கல்வியை அழகாய்க் கொடுத்து அஸ்திவாரம் போட்டவர்கள் அவர்கள்தானே! அதனால்தான் தத்துவ மேதையும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட விருப்பம் கொண்டார்!

இந்தநாளிலே அந்த அற்புதமான பணியை மனநிறைவோடு உண்மையாய்ச் செய்கின்ற ஆசிரியர்களுக்கு கவிதை ஒன்றை சமர்ப்பிக்கின்றேன்.

இக் கவிதை சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கவியரங்கத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.

மாமேதை ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை 

மகிழ்வுடனே கொண்டாடும் இந்த வேளை

ஆசிரியர் தம் மாட்சியதை கூறவந்தேன் பணிவோடு

ஆசான்கள் அருமையதை நினைத்திடுவோம் நெஞ்சோடு

கல்வி விதை தூவுவதே அவர் வேலை

அறிவுப் பயிர் வளர்ப்பதுவே அவர் வேலை

மடமைதனை போக்குவதே அவர் கடனாம்

மாண்பதனை வளர்ப்பதுவே அவர் செயலாம்

கல்வி ஒளி பரப்புகின்ற தீப மாவார்

கரை சேர்க்க உதவுகின்ற தோணியாவார்

ஏற்றத்தைக் கொடுக்கின்ற ஏணி யாவார் 

ஏழைகளும் போகின்ற பாதையாவார்

இளம்பிஞ்சு நெஞ்சத்தில் அன்பைச் சேர்த்து

இதமான பண்புகளை அழகாய்க் கோர்த்து 

நல்லோர்கள் மதிக்கின்ற நல்வழியும் காட்டி

நலமடைய வைத்திடுவார் திட்டமதைத் தீட்டி 

களிமண்ணைக் கையினிலே எடுக்கின் றீர்

கலனாக அதை நீங்கள் வடிக்கின்றீர்

கல்வியதில் சேமித்து வைக்கின்றீர்

கரைசேரும் வழியதனை காட்டுகின்றீர்

மாற்றத்தை அவர்தானே செய்ய வேண்டும்

மானுடத்தை அவர்தானே வளர்க்க வேண்டும்

அறியாமை நீங்கிடவே உழைக்க வேண்டும்

அன்புவழி தழைக்கத்தான் செய்ய வேண்டும்

நாட்டுக்கு அவர்தானே முதுகெலும்பு

அவர் இதயம் உறுதியான நல்லிரும்பு

தூய வெள்ளை உள்ளமதே அவர் இருப்பு

துணிந்தேதான் வகிக்கின்றார் பெரும் பொறுப்பு

தேசபக்தி தெய்வ பக்தி இரண்டும் சொல்வீர்

தேடரிய கலைகள் யாவும் தேடிச் செல்வீர்

முன்னேற்றப் பாதையதை காட்டிச் செல்வீர்

முயற்சி எனும் தேரேற்றிக் கூட்டிச் செல்வீர்

சாதி சமய பேதங்களை ஒழித்திடுவீர்!

பாதியிலே வந்ததிதை பழித் திடுவீர்

பெருகிவரும் தடை எதையும் உடைத்திடுவீர்

புதியதொரு சமுதாயம் படைத்திடுவீர்

விலைகேட்டு நதியெ துவும் ஓடவில்லை

பலன்கேட்டு பயிர் எதுவும் விளவதில்லை

பரிசு கேட்டு பகலவனும் வருவதில்லை

விருதுகளை நிச ஆசான் விரும்புவதில்லை

மேதைகளை அறிஞர்களை நீங்கள் தருவீர் 

மேலான கலைஞர்களை நீங்கள் தருவீர் 

நாட்டுக்கு தலைவர்களை நீங்கள் தருவீர் 

சமுதாயம் உயர்ந்திடவே வழிகள் சொல்வீர்

கல்லாய் இருப்பதை கலையாய் மாற்றுவீர்

கடினம் என்பதை கதையாய் ஆக்குவீர்

முயற்சி என்பதை முன்னே வைப்பீர்

முடியா தென்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பீர்

புத்தம் புது நூல்களை நாளும் கற்பீர்

புதியமுறை கற்பிக்கும் உத்திகளை ஏற்பீர்

எப்போதும் மாணவனாய் இருந்து கற்பீர்

தப்பாது தவறுகளை திருத்திக் கொள்வீர்

அரிசியிலே கலந்திருக்கும் கற்கள் போலே

பயிரிடையே செழித்திருக்கும் களைகள் போலே

வெள்ளாடை மீதினிலே களங்கம் சேர்க்கும் 

கருப்பாடு ஆசிரியர் வளர்வது தடுப்பீர்.

நாள்தோறும் தவறிழைக்கும் ஆசிரியர் சேதி 

நாளிதழில் படிப்பதனால் வேதனை மிகுதி

ஆசரியர் நற்பெயரை கெடுப்போர் அறிவீர்!

அடையாளம் கண்டவரை விலக்கி வைப்பீர்

ஒரு சிலரே உம்மை தினம் போற்றுகின்றார்

ஒரு சிலரோ உம்மை தினம் தூற்றுகின்றார்

தூற்றலையும் போற்றலையும் தூர வைத்து

ஏற்றமிகு எழுச்சியதை தோற்று விப்பீர்!


*********

உலகை உருவாக்கும் ஆசிரியர்களே உங்களுக்கு 

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

Post a Comment

Previous Post Next Post